தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக, இவ்வாரம் இன்றும் (21) நாளையும் (22) மாத்திரம் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கு, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை பாராளுமன்றில் அறிவித்தார்.
பாராளுமன்றமானது இன்று 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 24ஆம் திகதி வரை கூடவிருருந்தது.
கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் இன்று நடைபெறுகின்றது,
நாட்டில் தற்பொழுது நிலவும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்து நாளை (22) சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.
கடந்த மார்ச் 08ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) முதலாவது அறிக்கை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை மறுதினம் 23ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 530 மணிவரை நடைபெறவிருந்தது.
அத்துடன், அண்மையில் இடம்பெற்ற குழப்பமான சம்பவங்களின் போது படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான அனுதாபப் பிரேரணையின் இரண்டாவது நாள் விவாதத்துக்காக எதிர்வரும் 24ஆம் திகதி மு.ப. 10.00 மணி முதல் பி.ப. 5.30 வரையான நேரத்தை ஒதுக்குவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add new comment