- எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு
பொருளாதார நெருக்கடிக்கு தொடர்பில்லாத விடயங்களே விவாதிக்கப்படுவதால், இவ்வார பாராளுமன்ற நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக, சஜித் பிரேமதாசஸ, அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை வெளிநடப்பு செய்துள்ளன.
இன்றைய (21) பாராளுமன்ற அமர்வின் ஆரம்பத்தில் சஜித் பிரேமதாஸ மற்றும் அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவித்துவிட்டு இவ்வாறு வெளிநடப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் மீதான அதிருப்தியைக் காண்பிக்கும் பொருட்டு, பாராளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.ம.ச. தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தனது கட்சியின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், பாராளுமன்றம் கூட்டப்படுவதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மை என்ன என கேள்வி எழுப்பியதுடன், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எவ்வித நெருக்கடிகளுக்கும் தீர்வு காணப்படவில்லை என சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் மக்களின் சிரமங்களை கண்டுகொள்ளாமல் பாராமுகமாக இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரச்சினைகளை தீர்ப்பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இதுவரை இடம்பெற்ற நாடாளுமன்ற நடவடிக்கைகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் எவ்வித பயனையும் அளிக்கவில்லை என்று தேசிய மக்கள் சக்தி (NPP) தெரிவித்துள்ளது.
மக்களின் சிரமங்கள் மற்றும் குரல்கள் புறக்கணிக்கப்படும் நிலைக்கு பாராளுமன்றம் தற்போது வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பொறுப்பேற்கத் தவறியதால், நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதி தகுதியற்றவர் எனத் தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அவரை பதவி விலகக் கோரி பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுப்பது நியாயமானதும் புரிந்துகொள்ளக்கூடியதுமாகும் எனத் தெரிவித்தார்.
பிரதமரும் அரசாங்கமும் பதவியேற்று ஒரு மாதமாகியும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க முடியாத நிலையில் அவர்களும் தோல்வியடைந்துள்ளமை நிரூபணமாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த குறுகிய காலத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அதுவரை எதிர்க்கட்சிகள் பாராளுமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் எனவும் அநுர குமார திஸாநாயக்க இதன் போது தெரிவித்தார்.
Sri Lanka's opposition parties to boycott Parliament this week
Read : https://t.co/cvgAR0R9P0 pic.twitter.com/Wx1HAmUn3a— NewsWire (@NewsWireLK) June 21, 2022
Add new comment