பரீட்சை நிலைய பணி, விடைத்தாள் திருத்த பணிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை

- O/L விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை முதல் ஜூன் 26 வரை
- விண்ணப்பித்தோருக்கு SMS இல் விபரம்

இம்முறை இடம்பெற்ற 2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சை (2022) விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிக்குழுவினருக்கு விடைத்தாள் திருத்துவதற்கு செலுத்தும் கட்டணத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு பரீட்சைகள் நிலையங்களின் பணிக்குழாம் மற்றும் விடைத்தாள் மதிப்பிட்டாளர்களுக்கு வழங்கப்படும் நாளொன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவுத் தொகையை திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 10ஆம் திகதி, கல்வி அமைச்சர் மற்றும் தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் தனக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக,  பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயினும் இவ்வாறு அதிகரிக்கப்படும் தொகைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் எவ்வித அறிவிப்பையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2021 க.பொ.த. சாதாரண தர பரீட்சை திருத்தும் பணிகள் நாளை (17) ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பித்தவர்கள், குறித்த தினத்தில் தங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள SMS இல் குறிப்பிடப்பட்டுள்ள நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு உரிய ஆசிரியர்களுக்கு SMS அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2021 க.பொ.த. சாதராண தரப் பரீட்சைகள் கடந்த மே 23, திங்கட்கிழமை ஆரம்பமாகி ஜூன் 01ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தது.

குறித்த பரீட்சைக்கு,
பாடசாலை பரீட்சார்த்திகள் - 407,129 பேர்
தனிப்பட்ட பரீட்சார்த்திகள் - 110,367 பேர்
உள்ளிட்ட 517,496 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

நாடு முழுவதிலும் உள்ள 542 இணைப்பு நிலையங்களுடன் இணைந்தவாறு, 3,844 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சைகள் இடம்பெற்றிருந்தன.


Add new comment

Or log in with...