2023 இல் தரம் 01 இற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள திருத்தப்பட்ட சுற்றறிக்கை

- இவ்வார அமைச்சரவையில் 7 முக்கிய தீர்மானங்கள்

2023 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய இணைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்தும் போது மேலெழுந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு, அமைச்சின் விசாரணைப் பிரிவு, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களால் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைப் போலவே, அதுதொடர்பான நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கருத்தில் கொண்டு, திருத்தப்பட்ட புதிய சுற்றறிக்கையொன்று கல்வி அமைச்சால் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 2023 ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வரும் காலங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக குறித்த திருத்தப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள உட்பிரிவுகளை ஏற்புடையதாக்கிக் கொள்ள, நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்றைய (13) அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2. வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டளைகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்
1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகள் உள்ளிட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் 02 உம், 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க வியாபாரப் பண்ட அறிவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகள் விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் 06 உம், 1962 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 02/2022 ஆம் இலக்க அரசிறைப் பாதுகாப்பு கட்டளை விதிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்றை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் புதிய ஒழுங்குவிதியொன்றை வெளியிடல்
வெளிநாட்டுச் செலாவணிப் பாய்ச்சலில் இடம்பெறும் ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்காக  06 மாதகாலத்திற்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தில் 22 ஆம் உறுப்புரையின் கீழ் ஒழுங்குவிதியொன்றை வெளியிடுவதற்காக 2021 திசம்பர் மாதம் 06 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் மூலம் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதி செல்லுபடியாகும் காலம் 2022 யூலை மாதம் 01 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. குறித்த கட்டளை மூலம் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவது உகந்ததென இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய, 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் உறுப்புரையின் கீழ் புதிய ஒழுங்குவிதியொன்றை வெளியிடுவதற்கும், பின்னர் குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காகவும், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. சமூகப் பாதுகாப்புப் பங்களிப்பு வரிச் சட்டம்
2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. 'அங்கம்பொர' (உடற் போர்) தற்காப்புக்கலையைப் பாதுகாத்து மேம்படுத்தல்
எமது நாட்டில் காணப்படுகின்ற பாரம்பரிய விளையாட்டாகவும், தற்காப்புக் கலையாகவும், கலாச்சார மரபுரிமையாகவும் காணப்படுகின்ற ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலையை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பினும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதனால், ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலையைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறை வழங்கல்
கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 05 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது.

ஆனாலும், குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில் கொள்ளாமை, சிரேட்டத்துவத்தைப் பாதிக்கின்றமை மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. பயிர்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக அரச உத்தியோகத்தர்களை வலுப்படுத்தல்
தற்போது நிலவுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகள் போக்குவரத்துத் தடைகள் ஏற்பட்டுள்ளதுடன், அந்நிலைமையால் அரச ஊழியர்களுக்கு தமது போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் தோன்றியுள்ளன.

இந்நிலைமையில் வாரத்தில் கடமையாற்றும் ஒரு (01) நாள் அரச விடுமுறையை வழங்கி தொடர்ந்து வரும் காலங்களில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கின்ற உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது.

நீர் வழங்கல், மின்சார விநியோகம், சுகாதாரம், பாதுகாப்பு சேவைகள், கல்வி, போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய  சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்கள் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களை எதிர்வரும் 03 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மூடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 


Add new comment

Or log in with...