வருட வருமானம் ரூ. 12 கோடி; 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி

- சட்டமூலம் வர்த்தமானியிலும் பின்னர் பாராளுமன்றிற்கும்

ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன் ரூபாவிலும் (ரூ. 12 கோடி) அதிகம் பெறும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய சட்டவரைஞர்களால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்ட மாஅதிபரின் அனுமதி கிடைத்துள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நேற்றைய (13) அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...