இ.தொ.கா. மௌனம் காக்கவில்லை; முழுமையான விசாரணையில் ஈடுபட்டு வருகிறது

- ஜூன் 15ஆம் திகதி சௌமியபவனில் இறுதி விசாரணை அறிக்கை

நுவரெலியா பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தபளை, கொங்கோடியா தோட்டத்தின் 80 பேர்ச் (0.2 ஹெக்டயர்கள்) காணி நுவரெலியா பிரதேச சபைக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது. அக்காணி சபை தலைவரால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக  சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இது தொடர்பில் இ.தொ.கா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

கந்தபளை காணி பிரச்சினை  கடந்த மாதம் 31ஆம் திகதி ஊடகங்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அதே தினத்தில் இப்பிரச்சினை தொடர்பாக இ.தொ.காவினால் பாரபட்சம் இன்றி உரிய  விசாரணைகள்  மேற்கொள்ளப்படும் என ஊடக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் 08.06.2022 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில்  இக்குற்றம் உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்மென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இப்பிரச்சினை  தொடர்பான அரச துறையினரிடம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை உறுதிப்படுத்தப்படுத்துவதற்கான வேலைகளை இ.தொ.கா. முன்னெடுத்துவருகிறது.

வேலுயோகராஜா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு இ.தொ.கா. நடவடிக்கை எடுக்கவில்லை மௌனம் காத்து வருகின்றது என அச்சு ஊடகங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ள செய்திகள் முற்றிலும் ஏற்புடையதல்ல.

இக்குற்றச்சாட்டு தொடர்பாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இ.தொ.கா தலைமை காரியாலயத்தில் அனைத்து தரப்பினராலும்  சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் முழுமையாக ஆராயப்பட்டு வருகின்றது.

எதிர்வரும் 15ஆம் திகதி கந்தப்பளை காணி பிரச்சினை தொடர்பில் முழுமையான   விசாரணைகளை மேற்கொண்டு உண்மைத்தன்மையின் பிரகாரம் பாரபட்சம் இன்றி நடவடிக்கைகள்  எடுக்கப்படும்.

இக்குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில் இ.தொ கா இக்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவர்களை பாதுகாப்பதற்கோ, ஆதரவளிப்பதற்கோ என்றும் துணை போகாது.

மேலும் கடந்த சில நாட்களாக வேலு யோகராஜாவின் மோசமான வார்த்தைகளை கொண்ட குரல் பதிவொன்று சமூக வலையத்தளங்கள் வெளியாக பகிரப்பட்டு வந்துள்ளது. குறித்த குரல் பதிவில் மிக மோசமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பில் வேலு யோகராஜா 09.06.2022 அன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் அவர் இது ஒரு மிமிக்ரி செய்யப்பட்ட குரல் பதிவு என தெரிவித்திருந்தார்.

இக்குரல் பதிவு தொடர்பாக  சம்பந்தப்படவர்களிடம் இ.தொ.கா, வேலு யோகராஜாவின் தொலைப்பேசியில் இருந்து அழைப்பு வந்ததற்கான screen shot, குரல் பதிவு மற்றும் தொலைப்பேசி கட்டண சீட்டு ஆதாரங்களை கோரியுள்ளது.

இது உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில்  இது தொடர்பாகவும் அவர் மீது  இ.தொ.கா. கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.

மேலும் எதிர்வரும் 15ஆம் திகதி கந்தப்பளை காணி தொடர்பிலான ஆய்வு அறிக்கை விசாரணை முடிவு வெளியிடப்படும் என இதொ.கா. ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...