இரட்டை குடியுரிமை பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே பதவி விலகல்

- 21 ஆவது திருத்தத்துக்கு தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை

தனிப்பட்ட முறையில் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தான் விரும்பாத போதிலும், இரட்டை குடியுரிமை பிரச்சினைகள் எழுவதற்கு முன்னரே தான் பதவி விலகுவதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நேற்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷ, நேற்று (09) கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அரசாங்கத்திலிருந்தும் விலகினாலும் தனது அரசியல் நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லையென்றும் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜனாமா செய்வதற்கான கடிதத்தை பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளித்த பின்னரே ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தினார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுபட்டமையும், மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் வெற்றி பெறச் செய்தமையும் இரண்டு எதிர்பார்ப்புகளும் தற்போது நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்த பசில் ராஜபக்ஷ, விரக்தியினாலோ அழுத்தங்களினாலோ தான் பதவி விலகவில்லை என்றும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் கருத்துத் தெரிவித்த பசில் ராஜபக்ஷ, கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தம்மைக் குறை கூறுவதற்கு சிலர் முயற்சித்தாலும், அதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென்றும் தெரிவித்தார்.

தான் இந்தியாவுக்குச் சென்று நடத்திய கலந்துரையாடலின் பிரதிபலனாகவே இன்று நாட்டுக்கு எண்ணெய், உரம், மா என்பன வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நம்பியிருக்க முடியாதென தெரிவித்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுற்றுலாத்துறை, பணம் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதே அதற்கான ஒரே வழி எனவும் வலியுறுத்தினார்.


Add new comment

Or log in with...