மின்சார திருத்தச் சட்டமூலம் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

- 84 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
- ஆதரவு: 120 எதிர்: 36 தவிர்ப்பு: 13
- 4ஆவது சரத்துக்கு எதிர்க்கட்சி முன்வைத்த திருத்தம் மேலதிக வாக்குகளால் நிராகரிப்பு
- பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் வலுசக்தி அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட ஒழுங்கு விதிகள் நிறைவேற்றம்

2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க, இலங்கை மின்சாரச் சட்டத்தினைத் திருத்துவதற்கான இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்கள் இன்றி இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரியதுடன், இதில் குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், 13 பேர் நடுநிலை வகித்தனர். இதற்கமைய 84 வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் குழுநிலையில் 4வது சரத்துக்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கொண்டுவந்த திருத்தத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்தமையால் குறித்த திருத்தத்தை ஆளும் கட்சி மீளப்பெற்றுக் கொண்டது. இதற்கமைய எதிர்க்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா 4வது சரத்துக்கு திருத்தத்தை முன்வைத்ததுடன், இதற்கு அமைச்சர் எதிர்ப்புத் தெரிவித்ததும் எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரியிருந்தது. இதில் எதிர்க்கட்சி கொண்டுவந்த திருத்தம் 64 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 51 வாக்குகளும், எதிராக 115 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதன் பின்னர் 4வது சரத்துக்கு எதிர்க்கட்சி வாக்கெடுப்பைக் கோரியதுடன், இதற்கு ஆதரவாக 116 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டு 70 மேலதிக வாக்குகளால் 4வது சரத்து நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் 2022 மே மாதம் 17ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலத்தின் ஊடாக மின்சாரப் பிறப்பாகத்திற்கு விலைநோரும் நடைமுறையொன்றில் பங்குபற்றுவதற்கு எவரேனுமாளை அனுமதிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கமைய 25 மெகாவோட் மின்சாரப் பிறப்பாக்கக் கொள்வனவுக்கு மேலாக மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு பிறப்பாக்கும் உரிமையொன்றை வழங்குவதற்காக விண்ணப்பிப்பதற்கு தடையாகவிருப்பதற்கு ஆளொருவர் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாட்டை இல்லாதாக்குவதற்கும் பிறப்பாக்கக் கொள்ளளவின் மீதான ஏதேனும் வரையீடின்றி அதற்காக விண்ணப்பிப்பதற்கும் எவரேனுமாளை அனுமதிப்பதும் இதன் ஊடாக இடம்பெறும்.

கீழ்வரும் இணைப்பின் ஊடாக சட்டமூலத்தைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்
இலங்கை மின்சார திருத்தச் சட்டமூலம்.pdf

இதற்கு மேலதிகமாக 2021ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2021 ஒக்டோபர் 15ஆம் திகதிய 2249/32ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளும் அங்கீகரிக்கப்பட்டன.

இந்த ஒழுங்கு விதி 2021ஆம் ஆண்டு01ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் (நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் தலைமையதிபதியின் குறைந்தபட்ச தகைமைகள்) ஒழுங்குவிதி என எடுத்துக்காட்டப்படும்.

இதன்படி, 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழ் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர் ஒருவரின் குறைந்தபட்ச தகைமைகள் மற்றும் இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தின் குறைந்தபட்ச தகைமைகள் மற்றும் அனுபவம் ஆகியவை இந்த ஒழுங்கு விதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை கீழ்வரும் இணைப்பில் தரவிறக்கம் செய்யலாம்
அதிவிசேட வர்த்தமானி.pdf


Add new comment

Or log in with...