- அவரவர் விருப்பத்திற்கு அமைய அணிவது தடுக்கப்படவில்லை
- ஏனைய வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்
நாளை (10) முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் உள்ளக ரீதியிலும் வெளியிடங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் குறித்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 2264/9 எனும் 2022 ஜனவரி 25ஆம் திகதி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்ட இவ்விடயம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தல் மூலம், முகக்கவசதத்தை அணிவது தடுக்கப்படவில்லை என்பதுடன், முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பமாகும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயினும் சுவாச நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது உகந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், COVID-19 PCR சோதனை/ ரெபிட் அன்டிஜன் பரிசோதனையை இதற்கான பரிசோதனையாக மேற்கொள்வதும் நிறுத்தப்படுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கொவிட்-19 தொடர்பில் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு அமுலில் உள்ள ஏனைய விடயங்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு முகக்கவசம் அணிவது இடைநிறுத்தப்பட்டது
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமல்ல என, அப்போது புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி அறிவித்திருந்தார்.
ஆயினும் பொதுப் போக்குவரத்து மற்றும் மக்கள் ஒன்றுகூடி இடம்பெறும் உள்ளக நிகழ்வுகள் அல்லது செயற்பாடுகளின் போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அவர் அறிவித்திருந்தார்.
ஆயினும் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல என்பது தொடர்பான அதன் முந்தைய முடிவை சுகாதார அமைச்சு மீண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி மீளப்பெற்றிருந்தது.
முகக்கவசம் அணிதல்
கொவிட்-19 தொற்றை அடுத்து கடந்த 2020 ஜனவரி 29ஆம் திகதி முதல், அனைத்து மருத்துவ சேவை ஊழியர்களுக்கும் முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி, அப்போதைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சுற்றறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கு வேளையில், வீதிகளில் பயணிப்போர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, அப்போதைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment