மின்சார பொறியியலாளர் பணிப்பகிஷ்கரிப்புக்கு தடை விதித்தது நீதிமன்றம்

- மின்சார சட்டத்தை திருத்த இதுவே சிறந்த தருணம்
- சம்பள அதிகரிப்பு, உற்பத்திச் செலவுகளை பாவனையாளர்கள் மீது திணிக்க முடியாது

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில், இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு நீதிமன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) குறித்த தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டை பரிசீலித்த அமைய கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம எதிர்வரும் 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வேலை நிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் முழுமையாக மின்சாரம் தடைப்படலாம் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்க விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மின்சார விநியோகம் மற்றும் மருத்துவ சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (08) இரவு வெளியிட்டிருந்தார்.

2283/33 எனும் ஜூன் 08ஆம் திகதியிடப்பட்ட குறித்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2இன் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் குறித்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் பணிப்புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக, இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் அனில் ரஞ்சித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைநிறுத்தம் கைவிடப்பட்ட போதிலும், இன்று (09) அதிகாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரசத்தடை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு இலங்கை மின்சார சபையின் (CEB) தொழில்நுட்ப பொறியியலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்று  தெரிவித்திருந்ததுடன், இந்த வேலை நிறுத்தத்தை தற்போது ஏற்றுக்கொள்ள முடியாது என அதன் தலைவர் ஏ. நிஷாந்த சுட்டிக்காட்டியிருந்தார்.

மின்சார சட்டத்தில் திருத்தம்
மின்சார சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்க உறுப்பினர்கள் (CEBEU) உள்ளிட்ட ஒரு சில தொழிற்சங்கங்கள் தீர்மானித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மின்சாரத்தை வழங்குவதற்கு விலைகோரல் விடுப்பது தொடர்பான குறித்த சட்டமூலம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கடந்த  மே04ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் கடந்த மே 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செலவுகளை பாவனையாளர்கள் மீது திணித்து சம்பளத்தை அதிகரிக்கும் முயற்சி
மின்சார சபை பொறியியலாளர்கள் தங்களது சம்பளத்தை அதிகரிக்கும் வகையில், தற்போதுள்ள நிலைமையை பயன்படுத்தி மின்சார கட்டணத்தை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் அதற்கு தான் அனுமதிக்கப் போவதில்லையெனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த  3 வருடங்களில் 25% சம்பள அதிகரிப்பு
கூட்டு  ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 3 வருடங்களில் 25% சம்பள அதிகரிப்பை மின்சார சபை ஊழியர்கள் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீள் புதுப்பிக்கத்தகு சக்தி மற்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவை குறைப்பதற்கு எவ்வித திட்டமும் இல்லாமல், உயர்ந்த சம்பளம், மின்சார உற்பத்திச் செலவு போன்றன பாவனையாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இச்சட்டத்தை திருத்துவதற்கு இதுவே சிறந்த தருணம் என அவர் தனது ட்விட்டர் கணக்கில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 


Add new comment

Or log in with...