பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பசில்

- அரசியல் நடவடிக்கை தொடரும்; அரச நிர்வாகத்தில் ஈடபடமாட்டேன்
- 'கபுடாஸ்' போன்று பிழையாக ஏதாவது சொல்லி விடுவேன் என பயமாக உள்ளது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்கவிடம் இன்று (09) கையளித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (09) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

தான் தற்போது சாதாரண பொது மகன் எனவும், தாம் பதவி விலகிய போதிலும் தனது அரசியல் நடவடிக்கைகள் தொடரும் எனவும் தெரிவித்த அவர், தான் இனிமேல் அரச நிர்வாகத்தில் ஈடுபடமாட்டேன் எனவும் அரசாங்க பதவிகளில் பதவி வகிக்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் IMF தொடர்பில் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது,

தான் மீண்டும் கபுடாஸ் என்று பிழையாக ஏதாவது சொல்லி விடுவேன் என பயமாக உள்ளது. என கூறிவிட்டு சிங்களத்திலேயே அதற்கு பதில் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் 'கபுடாஸ் ஹிட் த பிளேன்' என கூறியதன் மூலம், அவரை கபுடாஸ் என செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(சிங்களத்தில் காகம் - 'கபுடா')

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜயந்த கெட்டகொட அப்பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, பசில் ராஜபக்‌ஷ, குறித்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, பசில் ராஜபக்ஷ, கடந்த ஜூலை 08ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராகவும், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நிதி அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அமைச்சரவைப் பொறுப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்கு ஏற்ப, நிதியமைச்சராக இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதாரக் கொள்கைகள், திட்ட அமுலாக்கல் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2021ஆம் ஆண்டு ஜூலை 08ஆம் திகதி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவர் சில மாதங்கள் நிதி அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்.

பசில் ரோஹன ராஜபக்ஷ இதற்கு முன்னர் இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...