2018 இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சனுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறை

நீதிமன்றத்தை அவமதித்த இரண்டாவது வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கின் தீர்ப்பு, இன்றையதினம் (07) புவனேக அலுவிஹாரே, எல்.டி.பி. தெஹிதெனிய, காமினி அமரசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமினால் வழங்கப்பட்டது.

மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்ற கடந்த வழக்கு விசாரணையில், குறித்த குற்றச்சாட்டை ரஞ்சன் ராமநாயக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

அதற்கமைய, அவருக்கு 5 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018ஆம் ஆண்டு பாராளுமன்றத்தைக் கலைத்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரிய அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் தொடர்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்ட கருத்து, நீதித்துறையை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது என உயர் நீதிமன்ற பதிவாளரினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க  சமூக வலுவூட்டல் பிரதியமைச்சராக இருந்த வேளையில், கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 21ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், இந்நாட்டிலுள்ள நீதவான்கள் மற்றும் வழக்கறிஞர்களில் பெரும்பாலானோர் ஊழல்வாதிகள் எனும் தெரிவித்ததாக அவருக்கு எதிராக கடந்த 2017ஆம் ஆண்டு முதலாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவுக்கு, 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர் தற்போது அதனை  அனுபவித்து வருவதோடு, குறித்த சிறைத்தண்டனை காரணமாக அவர் தனது எம்.பி. பதவியையும் இழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...