சிறைத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்த சஷி வீரவன்சவுக்கு பிணை

விமல் வீரவன்ச எம்.பியின் மனைவி, சஷி வீரவன்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அவரை இன்றையதினம் (31) பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது.

போலி ஆவணங்களை பயன்படுத்தி கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சஷி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தார்.

கடந் வெள்ளிக்கிழமை (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் 2 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், ரூ. 100,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்த தவறின் மேலும் 6 மாத சிறை எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடியாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் சஷி வீரவன்ச குற்றவாளியாக இனங்காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.

அவரது மேன்முறையீட்டு மனு நேற்று (30) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும், விசாரணையை இன்றையதினம் (31) வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டார்.

அதற்கமைய, அவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு பரிசீலனை செய்யப்படும் வரை அவருக்கு பிணை வழங்க இன்று (31) நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


Add new comment

Or log in with...