சிறைத் தண்டனையை எதிர்த்து சஷி வீரவன்ச மேன்முறையீடு

- மே 30 பிணை தொடர்பில் பரிசீலனை; அது வரை சிறையில்

கடவுச்சீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்து சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்துள்ளார்.

அதற்கமைய, அவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை எதிர்வரும் மே 30ஆம் திகதி பரிசீலிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் திகதி குறிப்பிட்டுள்ளது.

குறித்த பிணை மனு இன்று (27) கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷண கெகுனவலவின் உத்தியோகபூர்வ அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

போலித் தகவல்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சஷி வீரவன்சவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையும் ரூ. 100,000 அபராதத்தையும் விதித்திருந்தது.

குறித்த அபராதத்தை செலுத்தாவிடின் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சசி வீரவன்சவுக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொடுக்க உதவிய அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தீர்ப்பின் பிரதியொன்றை பொது நிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கையளிக்குமாறும் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

சஷி வீரவன்ச குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளிட்ட இரண்டு கடவுச்சீட்டுகளை மோசடியாக பெற்று வைத்திருந்ததன் மூலம், குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாக, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக போலியான பெயர்கள் மற்றும் பிறந்த திகதிகளுடன் ஆவணங்களை சமர்ப்பித்த சஷி வீரவன்ச, இது தொடர்பில் முதன் முறையாக 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இதனையடுத்து, சஷி வீரவன்சவுக்கு கொழும்பு பிரதான நீதவான் பிடியாணை பிறப்பித்திருந்தார்.

தற்போது, சஷி வீரவன்சவின் மேன்முறையீடு எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் அது வரை அவர் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.


Add new comment

Or log in with...