கடவுச்சீட்டு வழக்கு: விமல் வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட கடூழிய சிறை

- ரூ. 100,000 அபராதம்; செலுத்த தவறின் மேலும் 6 மாத சிறை

விமல் வீரவன்ச எம்.பியின் மனைவி சஷி வீரவன்சவுக்கு 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களை வழங்கி சட்டவிரோதமான வகையில் இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்ற வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்றையதினம் (27) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில், நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, சஷீ வீரவன்சவுக்கு ரூ. 100,000 ரூபா அபராதத்தையும் செலுத்துமாறும் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த அபராதத்தை செலுத்தாவிடின் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ராஜதந்திர கடவுச்சீட்டு உட்பட இரண்டு கடவுச்சீட்டுக்களை மோசடி செய்ததாக வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ஹோகந்தர, பிரதேசத்தைச் சேர்ந்த ரணசிங்க ரந்துனு முதியன்சேலாகே ஷிர்ஷா உதயந்தி இன்று (27) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் வாதியின் சாட்சியங்கள் 07 வருடங்களாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக, சமிந்த பெரேரா 2015 ஜனவரி 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

கடந்த 2010 செப்டெம்பர் 13, மற்றும் 2015 பெப்ரவரி 26 இற்கு இடையில், சட்டவிரோதமான வகையில் D3642817 எனும் கடவுச்சீட்டை வைத்திருந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், 1993 ஆம் ஆண்டின் இலக்கம் 16, 1998 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க மற்றும் 2006 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சட்டங்களால் திருத்தப்பட்ட 1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் பிரிவு 45 (1) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...