முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) நேற்று (25) மாலை 3 மணி நேர வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரிமாளிகைக்கு அருகில் 'மைனா கோ கம' மற்றும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்னால் 'கோட்டா கோ கம' அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டப்பட்டிருந்தது.
அலரி மாளிகைக்கு வந்த, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரின் ஆதரவாளர்கள் இவ்வாறு தாக்குதல் நடத்தியதன் விளைவாக நாடு முழுவதும் அமைதியின்மைச் சம்பவங்கள் குறித்து மஹிந்த ராஜபக்ஷவிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சுமார் 03 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட சிலர் நீதிமன்ற உத்தரவுக்கு பின்னரும் தமது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என சட்டமா அதிபர் நேற்றையதினம் தெரிவித்துள்ளார்.
அமைதியான போராட்டக்காரர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியமை தொடர்பிலான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் நேற்றையதினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்காக, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அயேஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரை தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த தனது கடவுச்சீட்டு அழிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாகவும், நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது அவரது உடைமைகள் எரிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு கடவுச்சீட்டும் எரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, காஞ்சன ஜயரத்ன ஆகியோர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கடவுச்சீட்டை ஒப்படைத்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள SLPP எம்.பிக்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக உள்ளிட்ட 6 பேருக்கு எதிர்வரும் ஜூன் 01ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை நேற்றையதின் (25) கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment