CID யில் 4 மணி நேர வாக்குமூலம் வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா?

தாம் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் தெரிவித்துள்ளார்.

மே 09ஆம் திகதி கொள்ளுப்பிட்டி 'மைனா கோ கம' மற்றும்  காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்ட களங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இன்றையதினம் (23) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் (CID) சுமார் 4 மணிநேர வாக்குமூலத்தை வழங்கிய ஜகத் அல்விஸ், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் புதிதாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதும், அமைச்சின் செயலாளர்கள் மீண்டும் நியமிக்கப்படுவது வழக்கம் எனத் தெரிவித்துள்ள அவர், தாம் குறித்த பதவியிலிருந்து இராஜினாமா செய்யவில்லையென தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சரவை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கடந்த மே 10ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் மீண்டும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...