மே 09 வன்முறை; இதுவரை 230 பேர் கைது; 68 பேருக்கு விளக்கமறியல்

- வடக்கில் ஒருவர் கிழக்கில் எவரும் கைதாகவில்லை
- அலரி மாளிகை அருகே வன்முறை; மொரட்டுவை மாநகர ஊழியர் கைது

மே 09 காலி முகத்திடல், கொள்ளுப்பிட்டி போராட்டங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை தொடர்பில் இதுவரை 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 68 பேருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஒரு சிலரை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில்

  • மேல் மாகாணம் - 71 பேர்
  • தென் மாகாணம் - 43 பேர்
  • மத்திய மாகாணம் - 17 பேர்
  • வட மேல் மாகாணம் - 36 பேர்
  • வட மத்திய மாகாணம் - 47 பேர்
  • சப்ரகமுவ மாகாணம் - 13 பேர்
  • ஊவா மாகாணம் - 02 பேர்
  • வட மாகாணம் - 01 பேர்
  • கிழக்கு மாகாணம் - ஒருவரும் கைதாகவில்லை

இதேவேளை, நாடு முழுதுவம் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸாரால் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
வன்முறைகள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் 1997 மற்றும் 118 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் மற்றும் [email protected] ஊடாக அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அலரி மாளிகை அருகே இடம்பெற்றுவந்த அமைதிப் போராட்டத்தின் மீது கடந்த மே 09ஆம் திகதி தாக்குதல் மேற்கொண்டமை, சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் முறையற்ற வகையில் ஒன்றுகூடியமை, வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில், மொரட்டுவை மாநகர ஊழியர் ஒருவர் CIDயினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 49 வயதான மொரட்டுமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மொரட்டுவை மாநகர சபை ஊழியராவார்.

குறித்த சந்தேகநபரை இன்றையதினம் (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) மேற்கொண்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...