அவசியமான தருணத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க புதிய பிரதமர் தயார்

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இலக்கு எனவும் தெரிவிப்பு-

பாராளுமன்றில் தமக்கு பெரும்பான்மை பலம் உள்ளதாக தெரிவித்துள்ள புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, அவசியமான தருணத்தில் அதனை நிரூபிக்கத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பிரதமராக நேற்றுமுன்தினம் பதவியேற்றதன் பின்னர் கொள்ளுப்பிட்டி - வாலுகாராம விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேநேரம், காலிமுகத்திடல் போராட்டத்திற்கு பொலிஸாரால் இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது உறுதியளித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அடுத்துவரும் மாதங்களில் இதைவிட நிலைமை மோசமாகும். இதிலிருந்து மீள வேண்டும். இதனை எம்மால் தனித்து செயற்படுத்த இயலாது. ஏனைய நாடுகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் உதவி அவசியமாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்றுமுன்தினம் மாலை புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அவர் பிரதமராக பதவியேற்கும் ஆறாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த நிலையில், புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேநேரம், புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்புடன் உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். அவர் பிரதமராக நியமிக்கப்பட்டமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குதல் என்பன நெருக்கடியை எதிர்கொள்வதற்கும், ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் முதல் படியாகும் என்றும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதுடன், அரசியல் ஸ்திரத்தன்மை குறித்தும் நம்பிக்கை கொள்வதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான அவரின் முயற்சிகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முழுமையான ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும், புதிய பிரதமருக்கு தமது ட்விட்டர் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...