புதிய அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றில் 130 உறுப்பினர்களுடன் பெரும்பான்மையை அவர் கொண்டுள்ளமை உறுதி
நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுப் பதவியேற்றுக்கொண்டார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விசேட நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய பிரதமராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
சத்திய பிரமாணத்தையடுத்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொள்ளுப்பிட்டி வாலுக்காராம விஹாரை மற்றும் கங்காராம விகாரைக்கும் விஜயம் செய்து பெளத்த தேரர்களின் ஆசியைப் பெற்றுக்கொண்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் தற்போது 130 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதில் பெரும்பான்மை ஆதரவு பொதுஜனபெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடையதாகும்.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் பதினொரு கட்சிகளின் உறுப்பினர்கள் பலரதும் ஆதரவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை பாராளுமன்றத்தில் காணப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீண்ட அரசியல் வரலாற்றைக் கொண்டவர்.
1993 ஆம் ஆண்டு மே தினத்தன்று கொழும்பில் நடந்த குண்டுத் தாக்குதலில் அப்போது ஜனாதிபதியாக இருந்த ரணசிங்க பிரேமதாச கொல்லப்பட்டதுடன் அரசியலமைப்புக்கிணங்க அப்போது பிரதமராக பதவி வகித்த டி.பி விஜேதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
அந்த சந்தர்ப்பத்தில் கைத்தொழில் அமைச்சராகவும், ஆளுங்கட்சியின் பிரதம கொரடாவாகவும் செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க முதல் முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 1994 ஆம் ஆண்டு வரை அவர் பிரதமராக பதவி வகித்தார்.
அதனையடுத்து 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது காமினி திசாநாயக்க படுகொலை செய்யப்பட்டதையடுத்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவியேற்றார்.
அதன் பின்னர் 1994 தொடக்கம்- 2004 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையிலான அரசாங்கத்தில் இரண்டு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார்.
அதன் பின்னர் 2004 தொடக்கம் - 2015 வரையான காலப்பகுதிகளில் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ள ரணில் விக்ரமசிங்க, 2015 ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதனையடுத்து 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
இத்தகைய சூழ்நிலையில் 2018 அக்டோபர் 26ஆம் திகதி அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். எனினும் அந்த ஆண்டில் இடம்பெற்ற குழப்ப நிலை, சர்ச்சைகளுக்குப் பின்னர் டிசம்பர் 17ஆம் திகதி அவர் மீண்டும் பெரும்பான்மையுடன் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதற்கிணங்க நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க 6வது தடவையாகவும் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.
இந்த பதவியேற்பானது இக்காலங்களில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment