முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 17 பேருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (09) இடம்பெற்ற 'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' அமைதி போராட்டங்கள் மீது, அலரி மாளிகையிலிருந்து வந்த SLPP ஆதரவாளர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் (12) குறித்த வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எம்.பிக்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெனாண்டோ, சனத் நிஷாந்த, பவித்ரா வன்னியாரச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, காஞ்சன ஜயரத்ன, ரோஹித அபேகுணவர்தன, சீ.பி. ரத்நாயக்க, சம்பத் அத்துகோரள, ரேணுக பெரேரா மற்றும் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக குறித்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நபர்களில் இச்சம்பவங்களை நேரில் கண்ட சாட்சியாளர்கள் மற்றும் அதில் காயமடைந்த 7 பேர் இதில் உள்ளடங்குகின்றனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் இடம்பெற்று வரும் மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர்கள் நாட்டில் தங்கியிருப்பது அத்தியாவசியமென இதன்போது சட்டா மாஅதிபர் சார்பில் நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் நாயகம் அயேசா ஜினசேனவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.
அதன் அடிப்படையில், குறித்த உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
Add new comment