2021 GCE O/L பரீட்சைகள் திட்டமிட்டபடி மே 23 முதல் ஜூன் 01 வரை

- நாளை வரை அனுமதி அட்டைகள் கிடைக்காவிட்டால் தொடர்பு கொள்ளவும்

2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள், திட்டமிட்ட வகையில் எதிர்வரும் மே 23 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவித்தலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

2021 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மே 23ஆம் திகதி தொடக்கம் ஜூன் 01ஆம் திகதி வரை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதற்கமைய பாடசாலை பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், நேர அட்டவணைகள் ஆகியன, உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள், அவர்கள் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கும் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

2022 மே 12ஆம் திகதி வரை இதற்கான அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத  பாடசாலைகளும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளவும்.

பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் பாடம், மொழி மூலம், பெயர் என்பவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், உரிய மாற்றங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பிரவேசித்து எதிர்வரும் 14ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையில் நிகழ்நிலையில் (online) திருத்தங்களை செய்து கொள்ள முடியும்.

அதற்கமைய பாடசாலை பரீட்சார்த்திகள் தமது அதிபர்கள் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனிப்பட்ட முறையிலும் தமது திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

இப்பரீட்சைக்குரிய நேர அட்டவணை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் (www.doenets.lk) வெளியிடப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு:
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு பெறுபேற்றுக்கிளை: 0112784208 / 0112784537/ 0113188350 / 0113140314
உடனடி தொலைபேசி: 1911


Add new comment

Or log in with...