மஹிந்த ராஜபக்‌ஷ திருகோணமலையில்; நிலைமை சீரானதும் அவர் விரும்பும் இடத்திற்கு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

இன்று (11) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கமல் குணரத்ன இதனை தெரிவித்தார்.

நாட்டில் தற்போதுள்ள நிலைமையை கருத்திற் கொண்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பின்னர், தாம் விரும்பும் இடத்திற்கு அவர் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார் என, கமல் குணரத்ன இதன்போது தெரிவித்தார்.

 

 

நாட்டின் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைவருக்கும் பாதுகாப்பு வழங்கப்படுவது கடமையாகும். மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து, இருந்த நிலைமையை கருத்திற் கொண்டு அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

எவரேனும் தவறிழைத்தால் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவரது குற்றங்கள் உறுதிப்படுத்தப்படும் நிலையில் சட்டத்தின் மூலம் மாத்திரமே தண்டனை வழங்க வேண்டும். அதனை விடுத்து சட்டத்தை கையிலெடுத்து, தண்டனைகளை நாமே வழங்க முடியாது என்றும் கமல் குணரத்ன தெரிவித்தார்.

தனது இராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையிலிருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலர் திருகோணமலை கடற்படை முகாமில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்றையதினம் அப்பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட ஸ்திரமற்ற பொருளாதார நிலை, ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகையில் ஒன்று கூடிய ஶ்ரீ.ல.பொ.பெரமுன கட்சி ஆதரவாளர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்ததைத் தொடர்ந்து, அலரிமாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் விளைவித்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திங்களன்று பதவியை இராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு வெளியிட்டிருந்தது.


Add new comment

Or log in with...