எந்த அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை; இந்திய துருப்புகள் இலங்கைக்கு என்பதும் பொய்

- இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிப்பு

எந்தவொரு அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லையெனவும் இந்தியா அதன் துருப்புகளை இலங்கைக்கு  அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக பதவி விலகிய மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி உள்ளிட்ட சிலர் திருகோணமலை துறைமுகம் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக செய்திகள் பரவி வந்த நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலயம் இதனை அறிவித்துள்ளது.

 

 

இலங்கையில் அரசியலமைப்பை நிலைநாட்டும் வகையில் இந்தியா தனது இராணுவத்தை அனுப்ப வேண்டுமென இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய எதிர்ப்பு சக்திகள் மக்களின் ஆத்திரத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும், இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிப்பதாகவும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் குறித்த விடயங்கள் தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தல்கள் வருமாறு,

 

 

1. குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது.

இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை.  இவ்வாறான செய்திகளை  உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது. 

 

2. இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவதாக சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் ஊகங்களின் அடிப்படையில் வெளியாகியிருக்கும் செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் முற்றாக மறுக்கின்றது.

இவ்வாறான செய்திகளும் நோக்குகளும் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. இலங்கையின் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றுக்கு இந்தியா பூரணமாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் நேற்றைய தினம் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். 


Add new comment

Or log in with...