கைதிகள் போராட்டத்திற்காக அழைத்துச் செல்லப்படவில்லை: சிறை ஆணையாளர்

- தொழிற்பயிற்சிக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதிகளில் 58 பேரை காணவில்லை

கைதிகள் போராட்டத்திற்காக அழைத்துச் செல்லப்படவில்லை என, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் எச்.எம்.டி.என். உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அவ்வாறான செய்தியொன்று பரவி வருவதாகவும் அச்செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கி அவர்களை தொழிற் பயிற்சியாளர்களாக மாற்றி சமூகத்தில் விடுவிக்கும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, பல வருடங்களாக கைதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.

இதன் ஒரு திட்டமாக முன்னெடுக்கப்பட்டு வந்த, சிறைச்சாலை கைதிகளை தினமும் கட்டட நிர்மாண நிறுவனங்களின் நிர்மாணப் பணிகளுக்காக சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றது. அதற்காக அவர்களுக்கு கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது. அதற்கமைய வட்டரெக்க சிறைச்சாலை மூலம் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் (09) கொள்ளுப்பிட்டி சிலக் நிறுவனத்திற்கு 30 கைதிகளும், இராஜகிரிய ஐகனிக் நிறுவனத்திற்கு 105 கைதிகளும், பத்தரமுல்லை மாகா நிறுவனத்திற்கு 45 கைதிகளும் அனுப்பப்பட்டிருந்தனர்.

நேற்று (09) பிற்பகல் வேளையில் நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கட்டட நிர்வாண நிறுவனங்களின் சேவைகளில் ஈடுபட்டிருந்த கைதிகளை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில், மாலபே - தலாஹேன பிரதேசத்தில் வைத்து, அவர்கள் பயணித்த பஸ் மீது பொதுமக்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது கைதிகள் பஸ்களில் இருந்து இறங்கிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதோடு, அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் கைதிகள் 123 பேர் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல முடிந்துள்ளதுடன், மேலும் 58 கைதிகள் காணாமல் போயுள்ளனர்.

ஆயினும் குறித்த கைதிகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றவர்களை தாக்குவதற்காக பயன்படுத்தியுள்ளதாக தற்போது பல்வேறு சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றது. இச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதை தெரிவிப்பதோடு அவ்வாறான எந்தவொரு சட்டவிரோதமான நடவடிக்கைகளிலும் கைதிகளை ஈடுபடுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றேன்.

எனவே சிறைச்சாலை பாதுகாப்பில் இருந்து இவ்வாறு சென்றுள்ள 58 கைதிகள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், அவர்களுக்கு எவ்வித துன்புறுத்தல்களையும் ஏற்படுத்தாமல் மீண்டும் சிறைச்சாலை திணைக்களத்திடம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.


Add new comment

Or log in with...