சிறுவர்களைக் கொவிட் - 19 தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் முக்கிய நடவடிக்கையாக இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய தேசிய மருந்துப் பொருட்கள் ஒழுங்குபடுத்துனர் அங்கீகாரம் அளித்துள்ளார் .
பயோலொஜிகல் ஈ நிறுவனத்தின் கோர்பேவக்ஸ் என்ற தடுப்பூசிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவெக்ஸின் என்ற தடுப்பூசிக்கும் இவ்வாறு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன. அத்தோடு சைடுஸ் கடிலா நிறுவனத்தின் ZyCov-D என்ற தடுப்பூசியின் இரண்டு டோஸுகளுக்கும் மருந்துப்பொருட்கள் ஒழுங்குபடுத்துனர் அனுமதி வழங்கியுள்ளதாக இந்தியா ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அங்கீகாரத்தின் படி, கோர்பவக்ஸ் தடுப்பூசியை 5 - 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கும் கோவக்ஸின் தடுப்பூசியை 6 - 12 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கும் அவசர தேவையின் நிமித்தம் வழங்க முடியும். அத்தோடு 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ZyCov-D தடுப்பூசியை வழங்கலாம்.
பெரும்பாலும் எல்லா வயது மட்டத்தினருக்கும் கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான தடுப்பூசி கிடைக்கப் பெறக்கூடிய சூழலில் இத்தடுப்பூசி வழங்குதலை விரிவுபடுத்துவதற்கான குறிப்பிடத்தக்க அங்கீகாரமாக இது விளங்குகிறது. நாட்டின் சில பகுதிகளில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு பாடசாலை செல்லும் சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட்டிராததும் ஒரு காரணம். தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களே இத்தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கான தகுதி பெற்றவர்களாக உள்ளனர். தற்போதைய சூழலில் இத்தடுப்பூசியை பெறுவதற்கான வயதெல்லையைக் குறைத்து வழங்கப்பட்டிருக்கும் அஙகீகாரம் பெரிதும் பயன்மிக்கதாக அமையும்.
என்றாலும் அரசாங்கத்தின் விஞ்ஞான நிபுணத்துவக்குழுவான கொவிட் 19 தொற்று கட்டுப்பாட்டுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை சபையின் சிபாரிசுகளுக்கு அமையவே 12 வயதுக்கு கீழப்பட்ட சிறுவர்களுக்கு இத்தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 12 - 14 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு கோர்பேவக்ஸ் தடுப்பூசியும் 15 - 18 இடைப்பட்ட சிறுவர்களுக்கு கோவக்ஸின் தடுப்பூசியும் வழங்கப்படுகின்றன.
Add new comment