2019 ஆம் ஆண்டு சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்களை தோண்டி எடுக்கும் பணிகள் இன்று (27) முற்பகல் அம்பாறை மயானத்தில் ஆரம்பமானது.
குறித்த குண்டு வெடிப்பில் சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் உயிரிழந்தாரா? என்பதை கண்டறிவதற்காக அம்பாறை நீதவான் முன்னிலையில் சடலங்களிலிருந்து மாதிரிகளை எடுப்பதற்காக இன்றையதினம் (27) பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2019 ஏப்ரல் 26ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஸஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் மொஹமட் ரிழ்வான் உள்ளிட்டோர் தற்கொலைக் குண்டை வெடிக்கவைத்து உயிரிழந்திருந்தனர்.
இதன் போது 17 பேர் மரணமடைந்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்த போதிலும், கட்டுவாபிட்டி ஆலயத்தில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட மொஹமட் ஹஸ்தூன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் எனும் பெண்ணின் உடல் பாகங்கள் DNA சோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இது தொடர்பில் இரண்டு சந்தர்ப்பங்களில் மேற்கொண்ட சோதனைகளில் இது உறுதிப்படுத்தப்படாத நிலையில், மீண்டுமொரு முறை குறித்த சடலங்களை தோண்டி எடுத்து சோதனையிட, அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தீர்மானித்துள்ளதன் அடிப்படையில், கல்முனை நீதவான் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு நீதிமன்றம் நேற்றையதினம் (26) அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய, சாரா ஜெஸ்மின் என அழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரனின் உடல் பாகங்கள் உள்ளனவா என அடையாளம் காணும் DNA சோதனைகளுக்காக குறித்த உடல் பாகங்களிலிருந்து மாதிரிகள் மீண்டுமொருமுறை இவ்வாறு தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment