நாட்டில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நீடித்து வருகின்றது. இந்நெருக்கடியைத் தணித்து கட்டுப்படுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட வண்ணமுள்ளன. இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளும் அரசினால் முன்னெடுக்கப்படுகின்றன.
நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து தீர்வு தேட வேண்டிய நெருக்கடியே இது. இந்நெருக்கடியின் பாரதூரத்தை உணர்ந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் தம் பதவிகளை முதலில் இராஜிநாமா செய்தனர்.
இதன் ஊடாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு தேட வழிசெய்யும் வகையிலேயே அவர்கள் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர். இதற்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அமைச்சரவையில் இணைந்து கொள்ள முன்வருமாறு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
ஆனால் அந்த அழைப்பை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த எடுப்பில் நிராகரித்தார். ஆன போதிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாகச் செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.
இவ்வாறான சூழலில் ஸ்ரீ.ல.சு கட்சி சார்பு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்நியமனத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் பேச்சுவார்த்தையை இக்கட்சிகள் இடைநிறுத்திக் கொண்டுள்ளன.
இதேவேளை பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து வைக்குமாறு கோரி நாட்டின் பல பிரதேசங்களிலும் ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும், நடைபவனிகளும் இடம்பெறுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைய துணைபுரியக் கூடியனவாக உள்ளன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே குறிப்பிட்டுள்ளது போன்று, 'வீதிகளில் நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் நாட்டுக்கு கிடைக்கவிருக்கும் டொலர்கள் கிடைக்காமல் போவதற்கே வழிவகுக்கும். இதனை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்'.
அத்தோடு ஆர்ப்பாட்டங்களின் ஊடாகப் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதுமில்லை என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இவ்வாறான சூழலில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்காவுக்குச் சென்றுள்ள நிதியமைச்சர் அலி சப்ரி 'சூம்' தொழில்நுட்பத்தின் ஊடாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில், 'நாம் பயணிக்கும் கப்பல் திடீரென நடுக்கடலில் வைத்து புயலில் சிக்கியுள்ளது. இக்கப்பலின் கப்டனுடன் உங்களுக்கு கோபம் இருந்தால் அக்கப்பலை கடலில் மூழ்கடிக்க முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் நாமும் நீரில் மூழ்கி இறக்கவே நேரிடும். அதனால் கப்பலின் பயணிக்கும் அனைவரும் ஒன்றிணைந்து மெதுவாகக் கப்பலை கரைக்கு கொண்டு வர வேண்டும். அதன் பிறகு கப்டனுடனான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுதான் உண்மை. தற்போது நாடு நடுக்கடலில் பயணித்த கப்பலைப் போன்று திடீரென பொருளாதாரப் புயலில் சிக்குண்டுள்ளது. இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போது தான் இப்பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெறக் கூடியதாக இருக்கும். இதைவிடுத்து ஆளுக்கொரு அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் பிரிந்து பிரிந்து செயற்படும் போது நாடும் மக்களும் தான் மென்மேலும் பாதிக்கப்படுவர். இதனை புரிந்து கொள்ள வேண்டிய தேவை பரவலாக எழுந்துள்ளது.
ஆகவே தற்போதைய சூழலில் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் முன்பாக உள்ளது. அந்த பொறுப்பின் அடிப்படையில் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்படுவதன் ஊடாகவே பொருளாதார புயலில் சிக்குண்டுள்ள இந்நாட்டை விரைவாகவும் வேகமாகவும் மீட்டெடுக்கக் கூடியதாக இருக்கும். அதுவே இப்போதைய உடனடித் தேவையும் ஆகும்.
Add new comment