புதிய அமைச்சரவை இன்று நியமனம்?

 15 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என தகவல் கசிவு

சமல், பசில், ஷசீந்திர உட்பட பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் புதிய அமைச்சரவையில் இல்லை எனவும் தகவல்

 

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்காக புதிய அமைச்சரவை நியமிப்பதற்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் புதிய அமைச்சரவை இன்றைய தினம் நியமிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் இவ்வாறு அமைச்சரவை உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் புதிய சிலரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

புதிய அமைச்சரவை இன்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் முன்னிலையில் பதவியேற்கவுள்ளதாக அறிய வருகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு பிரதமர் தவிர்ந்த அமைச்சர்கள் அனைவரும் கடந்த 3 ஆம் திகதி பதவி விலகினார்கள். அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் உள்ளடக்கி புதிய அமைச்சரவையை நியமிக்க யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக எதிரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் எதிரணி அதனை நிராகரித்தது. இந்த நிலையில் பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அத்தியாவசிய சேவைகளுக்காகவும் 4 அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டார்கள்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவை தொடர்பாக ஜனாதிபதி பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தினார். பதவி விலகிய முன்னாள் அமைச்சர்களுடனும் அவர் இது தொடர்பில்  கலந்துரையாடினார். அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்தல் மற்றும் புதிய அமைச்சரவை நியமனம் என்பன தொடர்பில் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது. சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர்கள் அதனை நிராகரித்துள்ளதாக அறிய வருகிறது. சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துள்ள இ.தோ.கவிற்கும் முக்கிய அமைச்சு பதவி கிடைக்கலாம் எனவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் மு.க மற்றும் மக்கள் காங்கிரஸ் எம்.பிகளுக்கும் அமைச்சு பதவி கிடைக்க உள்ளதாகவும் அறிய வருகிறது.

புதிய அமைச்சரவைக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய அமைச்சரவை கூட்டத்தை இன்றை தினம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.புதிய அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், புதிய அமைச்சரவையில் சமல் ராஜபக்ஸ, பஷில் ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் ஷஷிந்திர ராஜபக்ஸ ஆகியோர் இடம்பிடிக்கமாட்டார்கள் என அறிய முடிகின்றது.

கடந்த அமைச்சரவையில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர்கள், புதிய அமைச்சரவையில் இடம்பிடிக்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தாம் அமைச்சு பொறுப்புக்களை ஏற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன,சரத் வீரசேகர ஆகியோர் அறிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...