- நெருக்கடியை வெற்றி கொள்ள ஆதரவு வழங்குமாறு நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயற்பாடுகளின் சட்டபூர்வமான தன்மையையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்காக நான்கு அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) நியமித்துள்ளார்.
அதற்கமைய, இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு...
இதில் குறிப்பாக வெளிவிவகாரம் மற்றும் நிதி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, பாராளுமன்றத்தை பராமரிக்க சபை முதல்வர் மற்றும் பிரதம கொறடா ஆகியோரை நியமிக்க வேண்டியுள்ளதால், அமைச்சர்களாக தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள தேசிய சவாலுக்கு தீர்வாக பங்களிக்குமாறு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஜனாதிபதி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்காலத்தில் அவர்களுடன் கலந்துரையாடி நிரந்தர அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவாலை முறியடித்து நாட்டை நிலைநிறுத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களின் ஆதரவையும் ஜனாதிபதி கோரியுள்ளார்.
கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
- அலி சப்ரி - நிதி
- ஜீ.எல். பீரிஸ் - வெளி விவகாரம்
- தினேஷ் குணவர்தன - கல்வி (சபைத் முதல்வர்)
- ஜோன்ஸ்டன் பெனாண்டோ - நெடுஞ்சாலைகள் (ஆளும் கட்சி பிரதம கொறடா)
அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட முழு அமைச்சரவையும் தற்போது பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment