2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியானது

- விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றம்
- விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில்
- மார்ச் 31 வரை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்

இவ்வருடம் இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள், மற்றும் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் வெளியாகி உள்ளன.

இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஜனவரி 22ஆம் திகதி  இடம்பெற்ற 2021 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன், www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிடலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய சுட்டிலக்கதை சரியாக வழங்குவதன் மூலம் பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை பெற முடியும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,626 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 335,128 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த முறை முதல் அமுல்படுத்தப்பட்டவாறு, இம்முறையும் அகில இலங்கை ரீதியான தரப்படுத்தல் (Rank) மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் வெட்டுப்புள்ளிகள், அந்தந்த மொழி மற்றும் மாவட்டத்திற்கு ஏற்ப வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பெறும் விசேட தேவையுடைய மாணவர்கள் பிரிவில், அவர்கள் பெற்ற புள்ளிகளுடன் அவர்கள் புலமைப்பரிசில் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் விசேட அறிவிப்பு உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக, அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும் வழங்கப்பட்ட User Name மற்றும் Password இனை பயன்படுத்தி, உரிய பாடசாலையின் பெறுபேறுகளை தரவிறக்கி, அச்சிட்டு பெற முடியும் என்பதோடு, மாகாண மற்றும் வலய பணிப்பாளர்களும் இம்முறை மூலம் மாகாண, வலய மட்ட பெறுபேறுகளை பெறுவதற்கான வசதியும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து பாடசாலைகளினதும் பெறுபேறுகள் எதிர்வரும் நாட்களில் தபாலில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள தொடர்புகளுக்கு
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குபடுத்தல் மற்றும் பெறுபேறுகள் கிளை
011-2784208
011-2784537
011-3188350
011-3140314
துரித இலக்கம்
1911

பெறுபேறுகளை பெற


Add new comment

Or log in with...