இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, வெவ்வேறு வகை பாண்களின் புதிய விலைகள் 110 ரூபா முதல் 130 ரூபாவிற்கு இடையில் அமையுமென, இன்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.
இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று (11) முதல் அமுலாகும் வகையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை ரூ. 35 முதல் 40 வரை அதிகரித்துள்ளதாக கோதுமை மா இறக்குமதி நிறுவனங்களான செரண்டிப், பிறிமா நிறுவனங்கள் அறிவித்ததற்கமைய குறித்த விலையேற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சமைத்த உணவுப்பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, சோற்று பொதி ஒன்றின் விலை 20 ரூபாவாலும், கொத்து ரொட்டி ஒரு பொதியின் விலையை 10 ரூபாவாலும், சோர்ட்டீஸ்கள் உள்ளிட்ட சிறு உணவுப்பொருட்களின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்திக்கான அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதனால் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
Add new comment