ஒரு அமைச்சு மற்றும் இரண்டு இராஜாங்க அமைச்சுகளின் கடமைகளும், பொறுப்புகளும் மாற்றம் செய்யப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் குறித்த விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் கடமைகளும், பொறுப்புகளும் குறித்த வர்த்தமானியில் திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் பதிவாளர் நாயகம் திணைக்களம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ரக்னா ஆரக்சன லங்கா நிறுவனம், தேசிய பாதுகாப்பு நிதியம், ரணவிரு சேவை அதிகார சபை, அபி வெனுவென் அபி நிதியம் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன.
அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ், அனர்த்த முகாமைத்துவ தேசிய மன்றம், தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளன.
வனப் பாதுகாப்புத் திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், தேசிய மிருகக்காட்சி சாலைகள் திணைக்களம், அரச மரக் கூட்டுத்தாபனம் ஆகியன வனஜீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Add new comment