இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து ஜயந்த சமரவீர இராஜினாமா

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து ஜயந்த சமரவீர இராஜினாமா-Jayantha Samaraweera Resigns From His Post As State Minister

இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்றையதினம் (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்கு செய்திருந்த அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரான ஜயந்த சமரவீர, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.

தமது இராஜினாமா கடிதத்தை ஜனாபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், பாராளுமன்றத்தில் தனிக் குழுவாக அமரத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேசிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அரச பதவிகளிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச இதில் கலந்துகொள்ளவில்லை.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அவர்களது அமைச்சுப் பதவிகளிலிருந்து ஜனாதிபதியினால் அண்மையில் நீக்கப்பட்டிருந்தனர்  என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...