அமைச்சரவை மாற்றத்துடன் ஆளும் தரப்பு எம்.பிகளுக்கான ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். கைத்தொழிற்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நான்காவது வரிசையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாளை 8ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது இந்த ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படுகிறது.
விமல் வீரவங்ச கைத்தொழில் அமைச்சராக பணியாற்றிய போது அவருக்கு முன்வரிசை ஆசனமும் உதய கம்மம்பிலவுக்கு இரண்டாம் வரிசையில் ஆசனமும் ஒதுக்கப்பட்டிருந்தது. எஸ்.பி.திசானாக்கவுக்கு 4 ஆவது வரிசையில் முன்னர் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை ராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து கெபினர் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திலும் அமுனுகமவுக்கு 2 ஆம் வரிசையில்இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் ராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அருந்திக்க பெர்ணாந்துவுக்கும் 2 ஆம் வரிசையில் ஆசன ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சு பதவிகளில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டனர்.இதனையடுத்து அவர்களது சிரேஷ்டத்துவம் அடிப்படையில் பாராளுமன்றில் ஆசனங்களை ஒதுக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.ஏனைய சில அமைச்சுப்பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டாலும் அவர்களின் ஆசன ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்படவில்லை என அறியவருகிறது.
பாராளுமன்றம் நாளை முதல் 4 தினங்கள் கூட உள்ளது. 08ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணிவரை புலமைச் சொத்து (திருத்தச்) சட்டமூலத்தை (இரண்டாவது மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், மார்ச் 09ஆம் திகதி மு.ப 11.00 மணி முதல் பி.ப 4.30 மணி வரை தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மார்ச் 10ஆம் திகதி முற்பகல் 10.00 மணி முதல் பி.ப 12.30 மணி வரை வேலையாட்கள் நட்டஈடு (திருத்தச்) சட்டமூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதன் பின்னர் மதிய போசன இடைவேளை இன்றி பி.ப 12.30 முதல் பி.ப 5.30 மணிவரை நாட்டில் நிலவும் எரிசக்திப் பிரச்சினை தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்துக்கு நேரம் ஒதுக்குவதற்கும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
அதேநேரம், மார்ச் 11ஆம் திகதி மு.ப 10.00 மணி முதல் 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், மு.ப 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. (பா)
ஷம்ஸ் பாஹிம்
Add new comment