மனோ எம்.பியிடம் சஜித் தெரிவிப்பு
அரசாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும்சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோமென எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச எம்பி, தம்மிடம் உறுதியாக தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அரசாங்கம் ஆட்டம் காண்கிறது. வரலாறு முழுக்க தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதம் கக்கிய முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அரசிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்னமும் பலர் வெளியேற்றப்பட உள்ளனர். இந்நிலையில் வழமைபோல் புதிய கூட்டணிகள். புதிய நகர்வுகள் நிகழ்கின்றன.
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பற்றிய கருத்துகள் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் ஆகியோர் மத்தியில் நேற்று நடைபெற்ற உரையாடலின் போது, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் ஒருபோதும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியாக சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாச தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
இவர்களை தேர்தலுக்கு, முன்னரோ, பின்னரோ இணைத்துக்கொள்ள மாட்டேன் என சஜித் பிரேமதாச எம்பி தன்னிடம் கூறியதாக மனோ எம்பி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அரசிலிருந்து வெளியேறும், வெளியேற்றப்படும் வேறு சிலருக்கு இங்கே இடம் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக இத்தகைய இனவாதிகளுக்கு இடமிருக்க முடியாது. இடம் தந்து மீண்டும் ஒருமுறை இன்னொரு சுற்றுவட்டம் போக முடியாது. அதை எமது தமிழ், முஸ்லிம் மக்கள் தாங்க மாட்டார்கள்.
இன்று தேசிய சூழல், சர்வதேச சூழல் ஆகியவை பொருந்தி வருகின்றன. அவற்றை மீண்டும் பாழடிக்க இந்த இனவாதிகளுக்கு இடமளிக்க முடியாது. அத்தகைய எந்தவொரு முயற்சியையும் நான், முற்போக்கு சக்திகளுடன் சேர்ந்து எதிர்ப்பேன் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
Add new comment