விசேட பண்டங்கள் சேவைகள் வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்

விசேட பண்டங்கள் சேவைகள் வரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்-'Special Goods and Services Tax' Bill

- 2/3 பெரும்பான்மை; சர்வசன வாக்குரிமை அவசியம்

'விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி' சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியல் அமைப்புக்கு முரணானதாக இருப்பதாக, உச்ச நீதிமன்றம் அதன் வியாக்கியானத்தை தெரிவித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று (22) சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, அவற்றை பாராளுமன்றில் நிறைவேற்றுவதாக இருந்தால், பாராளுமன்றத்தின் 2/3 பெரும்பான்மை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் நிறைவேற்ற வேண்டுமெனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய சபாநாகரினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் வருமாறு,

அறிவித்தல்

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  ஆற்றுப்படுத்தப்பட்ட மனுக்கள் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க விரும்புகின்றேன்.

அரசியலமைப்பின் 123ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 120ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றம் பின்வருமாறு தீர்மானிக்கின்றது:-

  1. சட்டமூலத்தின் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 76(1)ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 148ஆம் உறுப்புரையுடன் சேர்ந்தும் வெவ்வேறாகவும் ஒவ்வாதனவாகின்றன.
  2. சட்டமூலத்தின் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 4(அ) மற்றும் 4(ஈ) ஆகிய உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 3ஆம் உறுப்புரையுடன் ஒவ்வாதனவாகின்றன.
  3. சட்டமூலத்தின் 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 3 மற்றும் 4(ஈ) ஆகிய உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 12(1)ஆம் உறுப்புரையுடன் ஒவ்வாதனவாகின்றன.
  4. சட்டமூலத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 152ஆம் உறுப்புரையுடன் ஒவ்வாதனவாகின்றன.
  5. சட்டமூலத்தின் 9(1)ஆம் வாசகம் அரசியலமைப்பின் 148ஆம் உறுப்புரையுடன் ஒவ்வாதனவாகின்றது.
  6. சட்டமூலத்தின் 9(1)ஆம் வாசகம் அரசியலமைப்பின் 149(1)ஆம் மற்றும் 150(1)ஆம் உறுப்புரைகளுடன் ஒவ்வாதனவாகின்றன.
  7. சட்டமூலத்தின் 11(1)ஆம் மற்றும் 11(3) ஆம் வாசகங்கள் அரசியலமைப்பின் 3ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 4(இ)ஆம் உறுப்புரையுடன் ஒவ்வாதனவாகின்றன.
  8. இத் தீர்மானத்தில் அடங்கியுள்ள பகுப்பாய்வு மற்றும் மேலே கூறப்பட்ட முடிவுகளுக்கு இணங்க உயர் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டு, மற்றும் 

(அ) சட்டமூலத்தின் 2, 3 மற்றும் 4 ஆகிய வாசகங்களின் பிரிக்க முடியாத சுபாவம்;

(ஆ) சட்டமூலத்தின் வசாகங்களை வெவ்வேறாகவும் அதனை முழுதாகவுமாக இரண்டு அடிப்படையிலும் ஆராய வேண்டிதன் அவசியமான தேவைப்பாடு;

(இ) சட்டமூலத்தின் 2, 3 மற்றும் 4ஆம் வாசகங்களை மீதமுள்ள வாசகங்களோடு இணைத்து ஆராய்ந்துபார்க்க வேண்டியதன் முக்கியத்துவம்; மற்றும்

(ஈ) சட்டமூலத்தின் 2ஆம் 3ஆம் மற்றும் 4ஆம் வாசகங்கள்அரசியலமைப்பின் 4(அ) மற்றும் 4(ஈ) ஆகிய உறுப்புரைகளுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டிய 3ஆம் உறுப்பரை மற்றும் அரசியலமைப்பின் 12(1), 76(1) மற்றும் 148 ஆகிய உறுப்புரைகளுடன் மீளச் சரிசெய்யமுடியாத முறையில் ஒவ்வாமையாக உள்ளதாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை கருத்திற்கொண்டு,

அரசியலமைப்பின் 123(2)(இ)ஆம் உறுப்புரையின் பிரகாரம், “விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி” எனும் சட்டமூலம் அரசியலமைப்பின் 84(2)ஆம் உறுப்புரையினால் தேவைப்படுத்தப்பட்டவாறு இச்சட்டமூலத்திற்கு சாதகமாக அளிக்கப்படும் வாக்குகளில் பாராளுமன்ற  மொத்த உறுப்பினர்களின் (சமூகமளிக்காத உறுப்பினர்கள் உட்பட) மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத உறுப்பினர்களின் எண்ணிக்கையுடன் அங்கீகரிக்கப்படுதல் வேண்டுமெனவும் அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையின் பிரகாரம் மக்கள் தீர்ப்பொன்றில் மூலம் மக்களின் அங்கீகாரத்திற்கு விடப்படவேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சட்டமூலத்தின் வாசகங்கள், பிரதானமாக அதன் அடிப்படை சுபாவங்கள் மற்றும் அமைப்பமாகுமென்பதால் அத்துடன் அரசியலமைப்புடன் ஒவ்வாமையாகும் வாசகங்களுக்கு திருத்தங்களை முன்வைப்பது சட்டமூலத்தில் அடங்கியுள்ள நோக்கங்களுடன் ஒவ்வாமையாகுவதால் சட்டமூலத்தில் அரசியலமைப்புக்கு முரணானதாக இனங்காணப்பட்ட வாசகங்களுக்கு குறிப்பான திருத்தங்களை முன்வைப்பது சாத்தியமானதல்ல என்பதனால், உயர் நீதிமன்றத்திற்கு அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை செயல்படுதுவதுடன், மேலே குறிப்பிட்ட  2, 3, 4, 5 மற்றும் 9(1) ஆகிய வாசகங்கள் அரசியலமைப்புடன் ஒவ்வாமை ஏற்படாத விதத்தில் திருத்தங்களை தீர்மானிப்பதிலிருந்து விலகிக்கொள்கின்றது என நீதிமன்றம் மேலும் குறிப்பிடுகின்றது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்றைய கூட்ட நடவடிக்கைகள் பற்றிய அதிகார அறிக்கையில் பதிப்பிட வேண்டுமென நான் கட்டளையிடுகின்றேன்.

PDF File: 

Add new comment

Or log in with...