தங்காலை கான்ஸ்டபிளின் மரணம் தொடர்பில் நால்வர் கைது

தங்காலை கான்ஸ்டபிளின் மரணம் தொடர்பில் நால்வர் கைது-Murder of Police Constable-Chathuranga Dilshan-4 Suspects Arrested

- 3 ஆண்கள், ஒரு பெண் கைது
- மேலும் பலருக்கு சம்பவத்துடன் தொடர்பு

தங்காலை, விதாரந்தெனிய, தேனகம பிரதேசத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான பொலிஸ் கான்ஸ்டபிள் சத்துரங்க டில்ஷான் (34) தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 4 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அதிவேக நெடுஞ்சாலையின் கசாகல நுழைவாயிலில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டு வந்த நபராவார்.

நேற்று முன்தினம் (17) இரவு 10.00 மணியளவில் தங்காலை, விதாரந்தெனிய பிரதேசத்தில் வைத்து, கடமைக்குச் செல்ல தயாராகிக் கொண்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள், அவரது இளைய சகோதரர், கான்ஸ்டபிளின் மனைவி ஆகியோர் தாக்கப்பட்டிருந்தனர்.

தனிப்பட்ட தகராறு தொடர்பான குறித்த தாக்குதலில் கான்ஸ்டபிள் உயிரிழந்ததோடு, 26 வயதான அவரது சகோதரர் பலத்த காயங்களுடன் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக 15 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...