நீதி, வெளி விவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களுடன் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி சந்திப்பு

நீதி, வெளி விவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்களுடன் 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி சந்திப்பு-'One Country, One Law' Task Force Meets with Justice-Foreign-Public Security Ministers

- வக்பு சபை தொடர்பில் செயலணியிடம் பொதுமக்கள் முன்வைத்த சிக்கல்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்

'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதிச் செயலணியினர், நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் சந்தித்திருந்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இதன்போது, செயலணியின் கடந்தகால மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்ற எண்ணக்கருவை அடைவதற்காக, ஜனாதிபதிச் செயலணியினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள யோசனைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனத்திற்கொண்டு, ஜனாதிபதியின் நோக்கத்தை அடைவதற்கு தங்களாலான ஒத்துழைப்புகளை வழங்குவதாக, இக்கலந்துரையடல்களின் போது, அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இனம் அல்லது மதம் சார்ந்த குழுக்களாக இணைந்து, பிரிதோர் இனத்தைச் சார்ந்தவர்களை வித்தியாசமாக நடத்தக் கூடாதென்று தெரிவித்த ஜனாதிபதிச் செயலணியினர், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஒரே நாடு - ஒரே சட்டம்' எண்ணக்கருவைச் செயற்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றி விவரித்தனர். இதுவரையில் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட கருத்தறிதல் மற்றும் கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சாட்சியப் பதிவுகள் தொடர்பிலும், அமைச்சர்கள் மூவருக்கு இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.

நீதித் துறையில் நீதி நிர்வாகத்தை விரைவுபடுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டம், புதிய நீதிக் கட்டமைப்பு, நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பான தகவல்களை, நீதி அமைச்சர் அலி சப்ரி, குறித்த செயலணியிடம் கையளித்தார்.

அத்துடன், நீதி அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பேரில், வக்பு சபையின் தலைவரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தார். வக்பு சபை தொடர்பில் பொதுமக்களால் செயலணியிடம் முன்வைக்கப்பட்ட சிக்கல்கள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸால், அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச மாநாடுகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், 'ஒரே நாடு ஒரே சட்டம்' என்ற எண்ணக்கருவை அடைவதற்காக ஜனாதிபதிச் செயலணியினால் முன்வைக்கப்படும் யோசனைகளானவை, சர்வதேசத் தொடர்புகளின் போது இலங்கைக்கு மிக முக்கியத்துவமிக்கவையாக அமையும் என்றும் குறிப்பிட்டார். 


Add new comment

Or log in with...