2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (22) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
நாளை இடம்பெறவுள்ள 2021 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எழுத 340,507 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 255,062 பேர் சிங்கள மொழி மூலமும், 85,445 பேர் தமிழ் மொழிமூலமும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
அதற்கமைய, மு.ப. 9.30 - 10.30 வரை முதலாவது வினாப்பத்திரமும் 11.00 - 12.15 மணி வரை இரண்டாவது வினாப்பத்திரமும் இடம்பெறவுள்ளது. மு.ப. 10.30 - 11.00 மணி வரை இடைவேளை வழங்கப்படவுள்ளது.
முதலாவது வினாப்பத்திரம் உளச் சார்பு சம்பந்தமாகவும், இரண்டாவது வினாப்பத்திரம் பாடத்திட்டம் தொடர்பாகவும் தாய் மொழி, கணிதம், சுற்றாடல், இரண்டாம் மொழி, ஆங்கில மொழி பரீட்சைகளாக அமைந்திருக்கும்.
எல்லா வினாத்தாள்களிலும் பரீட்சைக்கான சுட்டெண்ணை கட்டாயம் இடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சாத்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டையின் மேல் பகுதியை தனியாக பிரித்து வீடுகளில் பாதுகாப்பாக வைப்பதுடன், மற்றைய பகுதியை பரீட்சை நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் 2,943 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளதோடு, இந்நிலையங்களை இணைப்பதற்காக 496 இணைப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் மாணவர்கள்
இதேவேளை கொவிட்-19 தொற்றுக்குள்ளாகும் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்காக, விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
வலயத்திற்கு ஒன்று எனும் அடிப்படையில் கொவிட்-19 தொற்று அடையாளம் காணப்படும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் 108 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாடசாலை அதிபருடன் அல்லது பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர், மாவட்ட சுகாதார பணிப்பாளரோடு தொடர்புகொண்டு அவர்கள் ஊடாக பிள்ளைகளை பரீட்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை நேரகாலத்துடன் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இறுதி நேரம் வரை காத்திருக்க வேண்டாமென பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விசேட பரீட்சை நிலையங்களுக்கு செல்லும் பரீட்சாத்திகளுக்கு Rapid Antigen அல்லது PCR பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சாத்திகள் பரீட்சை நிலையத்திற்கு செல்லும் பொழுது பென்சில், நீலம் அல்லது கருப்பு நிற பேனை, அழிப்பான் மற்றும் இடைவேளையின் போது உண்பதற்கான சிற்றுண்டி ஆகியவற்றை மாத்திரமே எடுத்து செல்ல முடியும் என்பதுடன், வேறு எந்தவொரு பொருட்களையும் பரீட்சை நிலையத்துக்குள் கொண்டு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மாணவர்களுக்கு தடிமன், காய்ச்சல் உள்ளிட்ட கொவிட் தோற்று அறிகுறிகள் காணப்படும் நிலையில், பெற்றோர்கள் உரிய தரப்பினருடன் அல்லது பொதுச் சுகாதார பரிசோதகருடன் தொடர்பு கொண்டு பரீட்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment