ஆங் சான் சூகியிற்கு மேலும் 4 வருட சிறைத் தண்டனை

ஆங் சான் சூகியிற்கு மேலும் 4 வருட சிறைத் தண்டனை-Aung San Suu Kyi Sentenced to Four Years in Prison

ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியன்மார் நாட்டுத் தலைவி ஆங் சான் சூகிக்கு மேலும் 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது, சூகிக்கு எதிராக வழங்கப்படும் இரண்டாவது கட்டத் தீர்ப்பாகும்

அனுமதிப்பத்திரம் பெறாமல் வாக்கி-டாக்கிகளை (walkie-talkies) இறக்குமதி செய்து வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் சூ கி குற்றவாளி என அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் அறிவித்துள்ளதற்கு அமைய குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் பெறாத வாக்கி-டாக்கிகளை வைத்திருந்ததற்காக இரண்டு ஆண்டுகளும், கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் இரண்டு ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளன.

நோபல் பரிசு வென்ற 76 வயதான சூகி, மியான்மரின் அரச ஆலோசகராகவும், நாட்டின் தலைவராகவும் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற இராணவு ஆட்சிக் கவிழ்ப்பில் அவர் உள்ளிட்ட அந்நாட்டு அரச தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி அந்நாட்டு இராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

இதனைத் தொடர்ந்து சூகி உள்ளிட்ட கைதானவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, வழக்குகள் இடம்பெற்று வருகின்றன.

அப்போது முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, 2020 தேர்தல் பிரசாரத்தின்பேபாது கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடாத்திய மியன்மார் நீதிமன்றம், கடந்த டிசம்பர் மாதம் இரு குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆங் சான் சூகிக்கு தலா 2 வருடங்கள் வீதம் 4 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அத்துடன் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி, வின் மைன்டுக்கும் அதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படட்டது.

பின்னர் இராணுவ ஆட்சியால் அது பாதியாக குறைக்கப்பட்டது. இதன்படி புதிய தண்டனையுடன் சூக்கியின் சிறைக்காலம் மொத்தம் ஆறு ஆண்டுகளாக உள்ளது.

இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களால் ஆங் சான் சூகிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 வழக்குகளில் இரு வழக்குகள் தொடர்பான தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2020 தேர்தல் பிரச்சாரத்தின் போது கொவிட்-19 தொற்றுநோய் கட்டுப்பாடுகளை மீறியமை, அதனைத் தூண்டியமை, சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை இறக்குமதி செய்தமை மற்றும் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றிற்கும் உச்சபட்சமாக 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், காலனித்துவ கால உத்தியோகபூர்வ இரகசியச் சட்டங்களை வெளியிட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கு உச்சபட்சமாக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதோடு இதுவரை 1,303 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு, 10,600க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Add new comment

Or log in with...