வினோநோகராதலிங்கம் எம்.பி
இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்புவதற்காக ரெலோ எடுத்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு அந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அனைத்து கட்சிகளும் இணைந்து தயாரித்த வரைபை தமிழரசுக்கட்சி முற்றாக நிராகரிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா இன்னும் ஓரிரு நாட்கள் பிந்தினாலும் கூட இறுதிவரைபை தயாரித்து அனைவரும் கையொப்பம் இட்டு இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.
எனவே இந்த விடயத்தில் யார் கையொப்பம் இடுவது, யாரை தவிர்ப்பது, யார் விலகிக்கொள்வார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும். ஆயினும் தமிழீழ விடுதலை இயக்கம் எடுத்த முயற்சியினை ஒருபோதும் கைவிடப்போவதில்லை. இந்த முயற்சியில் இருந்து யாராவது பின்வாங்க விரும்பினால் அல்லது கையொப்பம் இடமறுத்தால் அது யாராக இருந்தாலும் அவர்களை விலத்திவைத்துவிட்டு இந்த வரைபை கையொப்பம் இட்டு அனுப்புவதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்வோம்.
வார்த்தை பிரயோகங்களை சாட்டாக வைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சி ரெலோ எடுத்த முடிவிற்குப் பின்னால் நாங்கள் செல்வதா என்ற சிறுபிள்ளைத்தனமான அல்லது தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கின்ற இந்த செயற்பாட்டினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஓமந்தை நிருபர்
Add new comment