ஜனவரி 03 முதல் அரச ஊழியர்களை முழுமையாக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

ஜனவரி 03 முதல் அரச ஊழியர்களை முழுமையாக சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை-Ensuring Public Service Without Interruption

ஜனவரி 03ஆம் திகதி முதல் அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களை மீண்டும் கடமைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக, அரசாங்க சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவலைத் தொடர்ந்து, சுகாதாரப் பிரிவின் வழிகாட்டலுக்கமைய, அரச சேவையில் உள்ள ஊழியர்களை சேவைக்கு அழைப்பதை மட்டுப்படுத்தும் வகையில், வீட்டிலிருந்து பணி உள்ளிட்ட நடைமுறைகளை பொது நிர்வாக அமைச்சு அமுல்படுத்தி வந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதமளவில் மீண்டும் அரச சேவை ஊழியர்கள் அனைவரும் சேவைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அதன் பின்னர் மீண்டும் கொவிட் தொற்று உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து, வாரத்திற்கு 2 நாட்கள் எனும் வகையில் மாதத்திற்கு உச்சபட்சம் 8 நாட்கள் கடமைக்கு சமூகமளிக்காதிருக்க அனுமதி வழங்கும் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...