பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்தை பறித்து சராமரி சூடு; 4 பேர் பலி

பொலிஸ் நிலையத்தில் ஆயுதத்தை பறித்து சராமரி சூடு; 4 பேர் பலி-Thirukkovil Police Station Shooting-4 Police Officers Died

- திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் படுகாயம்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பொலிஸ் அதிகாரிகள் உயிழந்துள்ளனர்

நேற்று (24) வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில், ஒரு கான்ஸ்டபிள் சாரதி உள்ளிட்ட 3 கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு சார்ஜென்ட் ஆகிய நால்வரே உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்

இச்சம்பவத்தில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட மேலும் 2 அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?
குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜென்ட் ஒருவர், அப்பொலிஸ் நிலையத்தின் வாயிலில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிசார் ஒருவரின் துப்பாக்கியை பறித்து பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் அப்போது பொலிஸ் நிலையத்திற்கு ஜீப்பில் வந்திறங்கிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மீதும் சராமரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

இதில் ஒரு கான்ஸ்டபிள் சாரதி உள்ளிட்ட 3 கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு சார்ஜென்ட் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட மேலும் 2 அதிகாரிகள் கல்முனை, அக்கரைப்பற்று, திருக்கோவில் ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சந்தேகநபர் அங்கிருந்து தனது கெப் வாகனத்தில், தான் வசிக்கும் மொணராகலை, எதிமலை பிரதேசத்திற்கு சென்று, இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் அதற்கான 19 தோட்டாக்களுடன் எதிமலை பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபரை அம்பாறை தலைமையக பொலிஸ் நிலையத்தில், எதிமலை பொலிஸ் பொறுப்பதிகாரி ஒப்படைத்துள்ளார்.

கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பின் கீழ், அம்பாறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் தலைமையில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேகநபர் என்ன காரணத்திற்காக இவ்வாறு துப்பாக்கிச் சூடு கொண்டுள்ளார் என்பது தொடர்பில் அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.