கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப்பாதை கவிழ்ந்த சந்தர்ப்பத்தில் கிண்ணியா பிரதேசத்தில் உள்ள அரச அலுவலக பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (13) குறித்த சந்தேக நபர்கள் இரண்டு பேரையும் ஆஜர்படுத்திய போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற குறித்த அனர்த்தத்தை அடுத்து, வீதியில் ஆர்ப்பாட்டம் செய்து, பிரதேச செயலகம் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கின் வீட்டுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும், கிண்ணியா வைத்தியசாலை வீதியில் வசித்துவரும் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும், மஹ்ரூப் நகர் பகுதியில் வசித்து வந்த 40 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு கையடக்க தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டமை தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சம்பவத்தில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)