- மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் 100 வருடம் வரை சிறைக்கு வாய்ப்பு
ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட மியான்மார் நாட்டுத் தலைவி ஆங் சான் சூகிக்கு 4 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
76 வயதான, சமாதானத்திற்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகி மியன்மார் அரசின் ஆலோசகராகவும், தலைவராகவும் இருந்து வந்தார்.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, கடந்த பெப்ரவரி 01ஆம் திகதி அந்நாட்டு இராணுவம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.
அப்போது முதல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தமை, 2020 தேர்தல் பிரசாரத்தின்பேபாது கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய அனர்த்த முகாமைத்துவச் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடாத்திய மியன்மார் நீதிமன்றம், குறித்த இரு குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் ஆங் சான் சூகிக்கு தலா 2 வருடங்கள் வீதம் 4 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி, வின் மைன்டுக்கும் அதே குற்றச்சாட்டுகள் தொடர்பில் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்படட்டுள்ளது.
ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதேவேளை, இராணுவ ஆட்சியாளர்களால் ஆங் சான் சூகிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 வழக்குகளில் ஒரு வழக்கிற்கான தீர்ப்பே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளதா தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 100 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்பட வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 1,300 இற்கும் அதிகமானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளதோடு, 10,000 இற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.