புதிதாக கண்டறியப்பட்ட மிகப் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா வைரஸ் பிறழ்வுக்கு (B.1.1.529), 'Omicron' என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பெயரிட்டுள்ளது.
கொவிட் வைரஸ் தொற்றுக்கு கிரேக்க அரிச்சுவடி எழுத்துகளில் பெயரிடும் (அல்பா, பீட்டா, டெல்டா) முறைமைக்கு அமைய அதன் 15ஆவது எழுத்தான 'Ο' ஒமிக்ரோன் ('Omicron') என பெயரிடப்பட்டுள்ளது.
(கிரேக்க அரிச்சுவடி Α α, Β β, Γ γ, Δ δ, Ε ε, Ζ ζ, Η η, Θ θ, Ι ι, Κ κ, Λ λ, Μ μ, Ν ν, Ξ ξ, Ο ο, Π π, Ρ ρ, Σ σ/ς, Τ τ, Υ υ, Φ φ, Χ χ, Ψ ψ, and Ω ω.)
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட குறித்த கொரோனா வைரஸ் திரிபு தொடர்பில், முதன் முதலில் நவம்பர் 24ஆம் திகதி உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இத்திரிபானது அதிகளவான மாறுபட்ட மரபணுவைக் கொண்டுள்ளதாக (mutation) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதுடன், இதில் பல மரபணுக்களுடனான வைரஸ்கள் மிக பாதிப்பை ஏற்படுத்துபவையாக கண்டறியப்பட்டுள்ளது.
The new #COVID19 virus variant - Omicron - has a large number of mutations, some of which are concerning. This is why we need to speed up our efforts to deliver on #VaccinEquity ASAP and protect the most vulnerable everywhere. https://t.co/b9QBMJXtJl
— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros) November 26, 2021
குறிப்பாக அதன் மீள்தொற்று (reinfection) மிக வேகமானதாக அமைகின்றது என WHO குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் பல்வேறு நாடுகளும் தென்னாபிரிக்காவிலிருந்து வருவோருக்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்துள்ளன.
தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ, ஈஸ்வதினி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இங்கிலாந்திற்குள் நுழைய முடியாது என அந்நாடு அறிவித்துள்ளது. இங்கிலாந்து அல்லது ஐரிஷ் நாட்டவர்கள் அல்லது இங்கிலாந்தில் வசிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mutation: வழக்கமாக உயிரினங்களில் ஏற்படும் புதிய கல உருவாக்கத்தின் போதான கலப் பிரிகையின் போது, அதில் ஏற்கனவே உள்ள DNA (மரபணு) அமைப்பு உள்ளவாறு பிரதி செய்யப்படுகின்றன. ஆயினும் ஏற்படும் சில பிரச்சினைகளால் மாற்றமாக பிரதி செய்யப்படுகின்ற மரபணு ஒழுங்கமைப்பானது Mutation எனப்படுகின்றது. (இது விஞ்ஞான ரீதியாக குளறுபடிகளால் ஏற்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது)
தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ் திரிபானது இவ்வாறான பல Mutation களை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.