- இன்று முதல் சட்டம் அமுல்
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக உயர்த்தும் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தி சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று (17) கையொப்பமிட்டுள்ளார்.
அதற்கமைய இன்றையதினம் முதல் குறித்த சட்டம் அமுலுக்கு வருகின்றது.
கடந்த வியாழக்கிழமை (11) குறித்த சட்டமூலம் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது மற்றும் வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்) ஆகிய இரு சட்டமூலங்களையும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று (17) சான்றுரைப்படுத்தினார்.
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை அதிகரிப்பது இந்தச் சட்டமூலங்களின் நோக்கமாகும்.
இதுவரை தனியார் துறையில் பணியாற்றும் பல்வேறு ஊழியர்களின் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயது நிர்ணயிக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பாலும் தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறுவது ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனருக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அடிப்படையாக கொண்டே ஆகும்.
இதற்கமைய, 2021ஆம் ஆண்டு 28ஆம் இலக்க “வேலையாளர்களின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயது” மற்றும் 2021ஆம் ஆண்டு 29ஆம் இலக்க “வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் (சிறப்பேற்பாடுகள்) (திருத்தம்)” ஆகிய இரு சட்டங்களும் இன்று (17) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
இது தொடர்பில் கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவையில் மேற்கொண்ட தீர்மானம் வருமாறு,
தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கு தற்போது காணப்படும் குறைந்தபட்ச வயதெல்லையைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கு 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தயாரிக்கப்பட்ட அடிப்படைச் சட்டமூலம், பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆடைக் கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தகத் துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் பற்றி ஆராயும் குழுவில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினர்களின் பங்கேற்புடன் தொடர்ந்து கலந்துரையாடப்பட்டது.
குறித்த சட்டம் நடைமுறைக்கு வரும் நாளில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஒய்வு வயதை 60 வரைக்கும் நீடிப்பதற்கும், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 வயது அல்லது அதற்கு அதிகமான ஊழியர்களின் வயதுக்கேற்ப மூன்று பிரிவுகளின் கீழ் உச்சபட்சம் 59 வயது வரை பணியாற்றுவதற்கு இயலுமான வகையில் ஏற்பாடுகளை
உள்வாங்கி சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள தனியார் துறை ஊழியர்கள் ஓய்வு பெறும் குறைந்தபட்ச வயதுச் சட்டத்தைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக தொழில் உறவுகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
இதேவேளை அரசாங்க ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 வயதாக உயர்த்துவதற்கு, 2022 வரவு செலவுத் திட்டத்தில் நிதியமைச்சரினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.