நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் நவம்பர் 22 திங்கட்கிழமை ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் நவம்பர் 22 திங்கட்கிழமை ஆரம்பம்-All Schools of Grade 6-7-8-9 Re-Commence from Nov 22

அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க முடியுமென கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

நேற்றைய (15) வரவு - செலவுத் திட்ட விவாதத்தின்பேபாது அவர் பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்திருந்தார்.

அதற்கமைய, இன்றையதினம் (16) பத்தரமுல்லை, இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில், சுகாதாரப் பரிந்துரைகளுக்கு இணங்க, அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளிலும் தரம் 6, 7, 8, 9 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மற்றும் கல்வி அமைச்சின் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

கொவிட்-19 தொற்று பரவல் நிலைமை காரணமாக கல்வி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த பாடசாலைகள், சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதற்கட்டமாக 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு தரங்களும், இரண்டாம் கட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளினதும் ஆரம்பப் பிரிவு தரங்களும், மூன்றாம் கட்டத்தின் கீழ் அனைத்து பாடசாலைகளின் சாதாரண மற்றும் உயர்தர தரங்களும் ஆரம்பிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து நான்காம் கட்டத்தின் கீழ், அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் 6, 7, 8, 9 மாணவர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (22) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.