கிழக்கு மாகாணத்திற்கு ஆளுநராக முன்னாள் அமைச்சரும் இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சி தலைவருமான வேதாந்தி சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸதீனை நியமிக்குமாறு நற்பிட்டிமுனை பளீல் பவுண்டேஷன் சமூக சேவை அமைப்பின் தலைவரும் முன்னாள் கல்முனை பிரதேச சபையின் உறுப்பினருமான தேசகீர்த்தி அப்துல் கபூர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க ஜனாதிபதி எடுத்த முடிவை முஸ்லிம் சமூகம் வாஞ்சையோடு வரவேற்பதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கடிதத்தில் அப்துல் கபூர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து வரும் மூவின மக்களின் அன்புக்குப் பாத்திரமானவராக முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் உள்ளார். இனவாதம், மதவாதம், பிரதேசவாதமற்ற மூத்த அரசியல்வாதியும் ஆவார். மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் அரசியலில் ஒன்றாக பயணித்து முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு தனித்துவ அரசியல் கட்சி தேவை என முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்தார். அதில் வெற்றியும் கண்டார்.
முஸ்லிம், தமிழ் ஆகிய சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் சில விட்டுக்கொடுப்புகளுடன் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருபவர்.
வடகிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த காலத்தில் தமிழ் தலைவர்களுடனும் தமிழ் மக்களுடனும் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வந்தவர்.
இவர் கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் ஆவார் என, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அப்துல் கபூர் தெரிவித்துள்ளார்.
(பெரியநீலாவணை விசேட நிருபர்)